காலையிலேயே - LifeStyle Today

Breaking

Tuesday, 25 March 2014

காலையிலேயே

காலையிலேயே ஓர் இளைஞர் என்னை நாடி வந்திருந்தார். சோகமாகக் காட்சி தந்தார். ஏதோ உள்ளுக்குள்ளே அவரைத் தனிமை சூழந்ந்து கொண்டிருப்பதைப் போல காட்சி தந்தார். ஏதோ ஒன்றை இழந்து விட்டதைப் போலவும், அவருடைய கண்கள் அதனைத் தேடுவதைப் போலவும் காணப்பட்டார். ஒரு வருட காலமாக என்னிடம் அவர் வந்து கொண்டுதானிருந்தார். இதைப் போன்றும் ஒருநாள் அவர் என்னை நாடி வருவார் என்பதை நான் முன் கூட்டியே அறிந்திருந்தேன். இதற்கு முன் அவரிடம் கற்பனையான ஓர் ஆனந்தம் குடிகொண்டு இருந்தது. அது மெல்ல மெல்ல மறைந்துவிட்டது.

கொஞ்ச நேரம் ஆழந்த மௌனம் ஆட்கொண்டிருந்தது. அவர் கண்களை மூடிக்கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு என்னைப் பார்த்துக் கூறினார்: 'நான் என்னுடைய நம்பிக்கையை இழந்து விட்டுள்ளேன். நானொரு கனவில் மிதந்துகொண்டிருந்தேன், அது உடைபட்டுவிட்டது. கடவுள் என்னுடன் இருப்பதாக நினைத்து இருந்தேன். ஆனால் இப்போது நான் தனிமையாக உணர்கிறேன். ஒருவித அச்சம் என்னைச் சூழந்துள்ளது. இவ்வளவு பலவீனனாக நான் இதுவரை உணர்ந்ததே இல்லை. பின்னுக்குச் சென்றுவிட விரும்பினாலும் அதுவும் அசம்பாவிதமாகவே தோன்றுகிறது. அந்த பாலமும் உடைந்து விட்டுள்ளது.

நான் கூறினேன்: இல்லாதது மட்டுமே பறிபோகக் கூடியது. இருப்பதை யாராலும் பறிக்க முடியாது. கனவையும் கற்பனையையும் சேர்த்துக் கொண்டால் அது தனிமையைப் போக்கி விடாது. வெறும் மயக்கத்தில் அழுத்திவிடும். கடவுளின் கற்பனையும் மானசீகக் கலப்படமும் கலந்த ஆனந்தம் உண்மையானதல்ல. அது ஆதரவு ஆகாது. வெறும் பிரமையே. பிரமைகளிலிருந்து வெகு சீக்கிரமாக விடுபடுவதே நன்மையாகும். கடவுளை உண்மையாக அடைய வேண்டுமானால் மானசீகமான நம்பிக்கைகளை எல்லாம் களைந்தெறிந்துவிட வேண்டும். அந்த நம்பிக்கைகளில் கடவுளின் நம்பிக்கையும் விதிவிலக்கல்ல. அதையும் விட்டுவிட வேண்டும். இதுவே தியாகமாகும். இதுவே தவம் எனப்படும். காரணம் என்னவென்றால் கனவுகளை விட்டு விடுவதைவிட அதிகமான கஷ்டம் வேறெதிலும் கிடையாது.

கனவு, கற்பனை, நம்பிக்கை இவற்றைப் புறக்கணிப்பதால் மட்டுமே 'இருப்பது' வெளியாகிறது. உறக்கம் கலைகிறது. விழிப்பு ஏற்படுகிறது. அதன் பின் அடைவதே உண்மையான அடைவதாகும். காரணம் அதனை யாராலும் பறிக்க முடியாது. அது எவ்வித அனுபவத்தாலும் களவு போவதில்லை. ஏனெனில் அது புற அனுபவமில்லை. சுய அனுபவனம்! அது ஏதோ ஒரு காட்சியின் தரிசனமல்ல. இது பரிசுத்தப் பார்வையாளனின் சுயஞானம். அது கடவுளைப் பற்றிய விசாரணையல்ல. சுயம் கடவுளில் ஆவது. கடவுளின் கற்பனையான நம்பிக்கையும் நினைவும் இழந்து விட்டால் பயப்படாதீர். அதுவும் நல்லதற்கே.

எல்லாவித நினைவுகளையும் இழந்துவிடுங்கள். அப்புறம் பாருங்கள். அப்போது காணப்படுவதே கடவுளாகும்.

No comments:

Post a Comment